மூன்றிலிருந்து முப்பது வரை

ஒரு இளைஞன் திரும்பிப் பார்க்கிறான்

ஒரு குறள் ஒரு பைசா

பதிந்தவர் மகேஷ் மேல் டிசம்பர் 2, 2008

ஒரு விடுமுறையில் என்று நினைக்கிறேன். அப்பா எங்களை திருக்குறள் படிக்கத் தூண்டினார். நாங்கள் மனப்பாடம் செய்யும் ஒவ்வொரு அதிகாரத்திற்கும் 10 பைசா தருவதாகச் சொன்னார். அதற்காக எங்கள் எல்லாருக்கும் ஒரு உண்டியல் வாங்கித் தந்தார். சிங்க முகத்தில் – நம்பர் வைத்துத் திறக்கக் கூடிய அழகான உண்டியல் அது. இன்னமும் திருநெல்வேலி வீட்டில் பத்திரமாக உள்ளது.

சரி, கதைக்கு வருவோம். அதிகாரத்திற்கு 10 பைசா தருவதாகச் சொன்ன அப்பா, அதையே அர்த்தத்துடன் படித்தால் 20 பைசாவாகத் தருவதாகச் சொன்னார். நாங்களும் போட்டி போட்டுக் கொண்டு படிக்க ஆரம்பித்தோம். அப்பாவிடம் குறளையும் அதற்கான பொருளையும் சொல்லிவிட்டு 20 பைசா வாங்கி உண்டியலில் போட்டு விடுவோம். இப்படியே ஒரு நூறு குறள் வரை படித்தோம். அதற்கு அப்புறம் அப்படியே விட்டுப் போயிற்று. 

பிற்காலத்தில் இந்த நூறு குறள் மற்றும் பள்ளியில் படித்த குறள் இவற்றை வைத்தே வண்டி ஓட்டி விட்டேன். 

அதுவும் பன்னிரெண்டாம் வகுப்பில் இருக்கும் போது, எங்கள் தலைமை ஆசிரியர் என்னைக் கூப்பிட்டு, பள்ளி prayerன் போது திருக்குறளும் அதற்கான விளக்கமும் அளிக்க வேண்டும் என்றும் கூறி மறுநாள் அதை நான் துவங்க வேண்டும் என்றும் சொன்னார். அடுத்த இரண்டு நாட்களுக்கான குறளைக் கூறி எனக்கு அடுத்து யார் சொல்ல வேண்டுமோ அவனிடமும் சொல்லச் சொன்னார். அவை இரண்டுமே கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ளவைதான். அதனால் வகுப்பிற்கு வந்து இன்னொரு பையனிடம் அடுத்த குறளை சொல்லி அதற்கு தயாராகுமாறு சொன்னேன். நான் அந்த குறளை மடமடவென்று சொன்னதும் எல்லாருக்கும் (ஆசிரியர் உட்பட) ஆச்சரியம். உடனே சிறு வயதில் பத்து பைசாவிற்கு திருக்குறள் படித்தது பற்றிய கதையை சொல்லி – நேயர் விருப்பத்தை முன்னிட்டு கடவுள் வாழ்த்து பத்து குறளையும் கூறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினேன்.

ஒருபுறம் அப்போது பெருமையாக இருந்தாலும் இப்போது நினைத்துப் பார்த்தால் தமிழ் நாட்டில் திருக்குறள் தெரிந்திருப்பது இவ்வளவு அரிதாகப் பார்க்கப் படுவதை நினைத்தால் வேதனையாகவும் உள்ளது.

மறுமொழி இடுக

XHTML: இந்தக் குறிச்சொற்களைப் பயன்படுத்தலாம்: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <pre> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>